Job 34

1பின்னும் எலிகூ மறுமொழியாக: 2ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள். 3வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல, காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.

4நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக; நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக. 5யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும், 6நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு இருந்த காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.

7யோபைப் போலவே, கேலிசெய்வதை தண்ணீரைப்போல் குடித்து, 8அக்கிரமக்காரருடன் சேர்ந்துகொண்டு, துன்மார்க்கருடன் சுற்றுகிறவன் யார்? 9எப்படியென்றால், தேவன்மேல் அன்பு வைக்கிறது மனிதனுக்குப் பயன் அல்ல என்றாரே.

10ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; அநீதி தேவனுக்கும், சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது. 11மனிதனுடைய செயல்களுக்கு ஏற்ப அவனுக்குச் சரிக்கட்டி, அவனவன் நடக்கைகளுக்கு ஏற்ப அவனவனுக்குப் பலனளிக்கிறார். 12தேவன் அநியாயம் செய்யாமலும், சர்வவல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே.

13பூமியின்மேல் மனிதனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? உலகம் முழுவதையும் ஒழுங்குபடுத்தினவர் யார்? 14அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாரென்றால், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்வார். 15அப்படியே உயிரினங்கள் அனைத்தும் இறந்துபோகும், மனிதன் மண்ணுக்குத் திரும்புவான்.

16உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், என் வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும். 17நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆள முடியுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?

18ஒரு ராஜாவைப் பார்த்து, நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்ல முடியுமோ? 19இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பார்க்காமலும், ஏழையைவிட செல்வந்தனை அதிகமாக நினைக்காமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லோரும் அவர் கரங்களின் செயல்களே. 20இப்படிப்பட்டவர்கள் உடனே இறப்பார்கள்; மக்கள் நடுஇரவில் கலங்கி இறந்துபோவார்கள்; பார்க்காத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள்.

21அவருடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். 22அக்கிரமக்காரர் ஒளிந்துகொள்ளக்கூடிய இருளுமில்லை, மரணஇருளுமில்லை. 23மனிதன் தேவனுடன் வழக்காடுவதற்கு அவர் அவன்மேல் அதிகமானதொன்றையும் சுமத்தமாட்டார்.

24ஆராய்ந்து முடியாதவிதத்தில், நியாயமாக அவர் வல்லமையுள்ளவர்களை நொறுக்கி, வேறு மனிதரை அவர்கள் இடத்திலே நிறுத்துகிறார். 25அவர்களின் செயல்களை அவர் அறிந்தவர் என்பதினால், அவர்கள் நசுங்கிப்போகும் அளவுக்கு இரவுநேரத்தில் அவர்களை அழித்துப்போடுகிறார்.

26அவர்கள் அவரைவிட்டுப் பின்வாங்கி அவருடைய எல்லா வழிகளையும் உணர்ந்துகொள்ளாமல் போனதினாலும், 27எளியவர்களின் வேண்டுதல் அவரிடத்தில் சேரவைத்ததினாலும், சிறுமையானவனுடைய வேண்டுதலை கேட்கிற அவர், 28எல்லோரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.

29மாயக்காரன் ஆளுகை செய்யாமலும், மக்கள் சிக்கிக்கொள்ளாமலும், 30ஒரு மக்களுக்காவது ஒரு மனிதனுக்காவது, அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கவைப்பான்? அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைப் பார்ப்பவன் யார்?

31நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவம் செய்யமாட்டேன். 32நான் பார்க்காத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் செய்தேனென்றால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லமுடியுமே. 33நீர் அப்படிச் செய்யமாட்டேன் என்கிறதினால், உம்முடன் இருக்கிறவர்களில் ஒருவனை உமக்குப் பதிலாக அதைச் செய்யச்சொல்வீரோ? நான் அல்ல, நீரே தெரிந்துகொள்ளவேண்டும்; அல்லவென்றால், நீர் அறிந்திருக்கிறதைச் சொல்லும்.

34யோபு அறிவில்லாமல் பேசினார்; அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று, 35புத்தியுள்ள மனிதர் என் சார்பாகப் பேசுவார்கள்; ஞானமுள்ள மனிதனும் எனக்குச் செவிகொடுப்பான்.

36அக்கிரமக்காரர் சொன்ன மறுமொழிகளினால் யோபு முற்றும்முடிய சோதிக்கப்படவேண்டியதே என் ஆசை. தம்முடைய பாவத்துடன் மீறுதலைச் சேர்த்தார்; அவர் எங்களுக்குள்ளே கைகொட்டி, தேவனுக்கு விரோதமாகத் தம்முடைய வார்த்தைகளை அதிகமாகப் பேசினார் என்றான்.

37

Copyright information for TamULB